கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே தவணை தொகை விடுவிக்கப்படும்

ஊட்டி, ஏப்.22: விவசாய கௌரவ நிதி திட்டத்தில் விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே இனி தவணைத்தொகை விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் ஒன்றிய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகிறது. அவற்றில் மிகவும் முக்கியமான திட்டமான பிரதம மந்திரி விவசாய கௌரவ நிதி திட்டத்தின் கீழ் உழவர் கடன் அட்டை வழங்கப்படுகிறது. இதன்மூலம், விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்குவதற்கான கிசான் பாகிதாரி பிராத்மிக்தா ஹமாரி சிறப்பு முகாமானது வரும் 24ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிஎம் கிஷான் பயனாளிகளில் விடுபட்ட விவசாயிகளும் இச்சிறப்பு விழிப்புணர்வு முகாம் மூலம் உழவர் கடன் அட்டை பெற்று பயன் அடையலாம். இம்முகாமில் அனைத்து கிராமிய, நகர்ப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், முதன்மை விவசாய கடன் சங்கம், நபார்டு வங்கி, மாவட்ட நிர்வாகம் மற்றும் இதர துறைகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும், உழவர் கடன் அட்டை பெறாத அனைத்து பிஎம் கிஷான் பயனாளிகளும், மற்ற விவசாயிகளும் தங்களது நில ஆவணங்கள், அடங்கல், பயிர் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கியிலும் கடன் அட்டை பெறவில்லை என்ற உறுதிப்பிரமாணம் ஆகியவற்றுடன் பிஎம் கிஷான் வலையதளத்தில் (www.pmkisan.gov.in) உள்ள விண்ணப்பம் அல்லது வங்கிகளின் வலைதளத்தில் (www.agraicoop.gov.in) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயனடையலாம்.

மேலும், இனிவரும் காலங்களில் விவசாய கௌரவ நிதி திட்டத்தில் விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே இனி தவணைத்தொகை விடுவிக்கப்படும். இதற்கான சிறப்பு முகாமும் 24ம் தேதி நடைபெறும் கிராம பஞ்சாயத்து அளவிலான கிராம சபா கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும், விவசாயிகள் அனைவரும் தங்களது கைரேகையை பொது சேவை மையத்திற்கு சென்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் 24ம் தேதி நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் பங்கு பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: