×

அரசு நிறுவனம் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அயல்நாட்டில் வேலை வாய்ப்பு மாவட்ட நிர்வாகம் தகவல்

சிவகங்கை, ஏப்.21: அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நாடுகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் வேலைநாடும் இளைஞர்களுக்கு அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் அமைப்பாகும். இந்நிறுவனத்தின் வாயிலாக இதுவரை 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, பஹ்ரைன், லிபியா, குவைத், சவுதி அரேபியா, ஓமன், துபாய் மற்றும் கத்தார் போன்ற பல்வேறு நாடுகளில் மருத்துவர், பொறியாளர், செவிலியர் உட்பட திறன் சார்ந்த மற்றும் திறன் அல்லாத பணியிடங்களில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

 இந்நிறுவனத்தின் நோக்கம் திறன் படைத்த இளைஞர்களை உருவாக்குதல், ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், படித்தல், கவனித்தல் போன்ற திறன்களை வளர்த்தல், ஆண்டுதோறும் 500 செவிலியர்களுக்கு தொழில் தொடர்பான ஆங்கில தேர்வு முறை பற்றிய பயிற்சி வழங்குதல், தேர்வு செய்யக்கூடிய செவிலியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.18 லட்சம் வரை ஊதியம் பெற்றுத்தர வழிவகை செய்தல் போன்றவை ஆகும்.

அயல்நாட்டில் வேலை தேடும் இளைஞர்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் சுய விவரங்களை பதிவு செய்து அயல்நாடுகளில் வேலைவாய்பை பெறலாம். இந்நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்கள் மற்றும் அதற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையத்தளத்தில் அறியலாம்.  கூடுதல் விவரங்களை சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி (04575 240435) மூலமோ அறியலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது