மாநகரில் தினமும் 2 ஆயிரம் டன் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை

திருப்பூர், ஏப் 21: திருப்பூர் மாநகரில் தினமும் 2 ஆயிரம் டன் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட 43வது வார்டு கள்ளிக்காடு தோட்டம் நுண் உர செயலாக்க மையம், தந்தை பெரியார் நகர், ஜீவாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதிகளில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார்.

பின்னர் மேயர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற தத்துவத்தின் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சியில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருப்பூர் முழுவதும் சேகரிக்கப்படுகிற குப்பைகளை கணக்கிடும் பணியை தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாக திருப்பூரில் 29 இடங்களில் செயல்படுகிற நுண் உர செயலாக்க மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த காலங்களில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகளை மொத்தமாக அகற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் தொடங்கிய பணியின் காரணமாக நாள் ஒன்றுக்கு சேகரிக்கப்படுகிற குப்பை 620 டன் ஆகும். அடுத்த 10 நாட்களுக்குள் மாநகராட்சி முழுவதும் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு முன்னேற்பாடாக தினமும் 2 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக தனி அலுவலர் நியமிக்கப்பட்டு அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் துணை மேயர் பாலசுப்ரமணியம், கவுன்சிலர்கள் சாந்தாமணி, அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் மியாமி அய்யப்பன், தெற்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் தம்பி வெங்கடாச்சலம், வட்ட கழக செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: