பொதுத்தேர்வு குறித்த அச்சத்தை போக்கும் வகையில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பலகை

நாமக்கல், ஏப்.20: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அரசு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் துவங்குகிறது. 10ம் வகுப்புக்கு 6ம் தேதியும், 11ம் வகுப்புக்கு 2ம் தேதியும், 12ம் வகுப்புக்கு 5ம் தேதியும் துவங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டாக கொரோனா தொற்றால் அரசு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் நடைபெறவில்லை. இந்த ஆண்டும் பள்ளிகள் தாமதாக திறக்கப்பட்டதால் தேர்வுகளும் இரண்டு மாதம் தாமதாக நடைபெறுகிறது. இதற்காக குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், அதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேர்வுகள் துவங்கப்படும் நாள், தேர்வுக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது என்பது குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பெரியண்ணன், உதவித் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் ஆகியோர் கூறுகையில், தேர்வுக்கான பாடங்கள் அனைத்தும் ஆசியர்களால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆசிரியர்கள் அவர்களை தயார்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு இப்பள்ளியில் பிளஸ்2 தேர்வினை 160 பேரும், 10ம் வகுப்பு தேர்வினை 90 பேரும் எழுதுகிறார்கள். தேர்விற்கான விடைத்தாள் தைக்கும் பணி துவங்கியுள்ளது. பொதுத்தேர்வினை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் தினமும் பள்ளியில் அவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் நோட்டீஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த நோட்டீஸ் போர்டை பார்த்து தேர்வுக்கு விரைவாக தயார்படுத்தும் வகையில் இந்த போர்டில் தினமும் தேர்வு குறித்த தகவல்கள் இடம்பெறுகிறது என்றனர்.

Related Stories: