1500 குடும்பங்களுக்கு பட்டா அறிவிப்பு கலெக்டர், எம்பியுடன் விவசாயிகள் சந்திப்பு

ராசிபுரம், ஏப்.20: ராசிபுரம் அருகே நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பட்டா வழங்க சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளதை வரவேற்று விவசாயிகள் கலெக்டர் மற்றும் எம்பியை சந்தித்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை, நாரைக்கிணறு, ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் அனுபவிக்கும் நிலங்களுக்கு முறையான பட்டா இல்லாததால், பல ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வந்தனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிபடி நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நாரைக்கிணறு சுற்று வட்டார பகுதி விவசாயிகளுக்கு பட்டா வழங்க அளவீடு செய்யப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்பி உள்ளிட்டோர் மூலமாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் எம்பி சுந்தரம், அயலக அணி மாநில நிர்வாகி முத்துவேல் ராமசாமி, ராசிபுரம் நகர திமுக செயலாளர் சங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 அப்போது, விவசாயிகள் பேசுகையில், நாடு சுதந்திரமடைந்த பின்பு நிலத்தை அனுபவித்தவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் அதன்பிறகு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன், நமது பகுதியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், கலெக்டர் ஸ்ரேயாசிங், தொகுதியின் அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோரின் தீவிர முயற்சியால் பல ஆண்டு கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். பட்டா வழங்க ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், என்றனர். முன்னாள் எம்பி சுந்தரம் பேசுகையில், எதிர்க்கட்சிகள் திமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என கூறியுள்ளார்கள். நான் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க முயற்சித்தேன். தற்போதைய திமுக அரசு இதனை நிறைவேற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளது என்றார்.

Related Stories: