கோடை காலம் துவங்கியதால் பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் அரசு பள்ளி மாணவர்கள்

தர்மபுரி, ஏப்.20: தர்மபுரி அடுத்த பாடி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து, பீனிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு மூலம், அப்பகுதியில் உள்ள ஏரியில், கடந்த 2 ஆண்டுகளாக, மா, பலா, நாவல் மற்றும் கொய்யா, வேம்பு உள்ளிட்ட சுமார் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு வைத்து, பராமரித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் மரக்கன்றுகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், மரக்கன்றுகள் பாதிக்காத வகையில், அங்குள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றி பராமரித்து வருகின்றனர். மேலும், கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மரங்களில் பாட்டில்களில் உணவு -தண்ணீர் வைத்து வைக்கின்றனர். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை இரண்டு துண்டாக வெட்டி, துளையிட்டு அங்குள்ள மரங்களில் கட்டி தானியங்களையும், தண்ணீரையும் நிரப்பி வைத்து வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில், உணவு மற்றும் தண்ணீர் தேடி ஏரியில் உள்ள மரங்களுக்கு பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பீனிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த கோவிந்தசாமி கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து வருகிறோம். எங்கள் பகுதியில் வறட்சி ஏற்படுவதால், அதை போக்கவே நாங்கள் மரங்கள் அதிகம் வளர்க்கிறோம். இதன்மூலம் மழை காலத்தில் மரங்கள் மூலம் அதிக நீரை பூமியில் சேமித்து வைக்க முடிகிறது. எங்கள் ஊர் ஏரியில் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. தற்போது கோடை காலத்தில் பறவைகளுக்கு உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பிளாஸ்டிக் பாட்டிலில் உணவு, தண்ணீர் வைத்து மரத்தில் தொங்க விடுகிறோம். இதனால் பறவைகள் அதிகம் வருகின்றன. எங்கள் ஊர் பகுதி இயற்கையால் சூழ்ந்த பகுதியாக மாறி வருகிறது. இவ்வாறு கோவிந்தசாமி தெரிவித்தார்.

Related Stories: