தீர்த்தமலை அரசுப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட துவக்க விழா

தர்மபுரி, ஏப்.19:  அரூர் தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின், மருத்துவ முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் திவ்யதர்சினி தலைமை வகித்து பேசியதாவது: கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் வட்டார அளவிலான சுகாதார திருவிழா, தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வட்டாரம் தோறும் நடைபெறும் மருத்துவ முகாம் மூலம், கிராமப்புற மக்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு, உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படுகிறார்கள். மாவட்டத்தில் 8 வட்டாரங்களிலும் மொத்தம்  8 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரூர் ஆர்டிஓ முத்தையன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், அரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரளா, ஒன்றியக்குழு உறுப்பினர் புஷ்பலதா, கலைவாணி, வட்டார மருத்துவ அலுவலர் தொல்காப்பியன், பிடிஓக்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: