சேலம் -நாமக்கல் தேசிய சாலையில் மேம்பால பணியால் தொடர் வாகன விபத்து

ராசிபுரம், ஏப்.13: சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு, ஏடிசி டிப்போ, ஆண்டலூர் கேட் அடுத்த ஏ.கே. சமுத்திரம் ஆகிய 3 இடங்களில், விபத்துக்களை தடுக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 3 இடங்களிலும் மாற்றுப் பாதை அமைத்து, வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிக்காக அதிக அளவில் மண் மற்றும் இரும்பு பேரல்கள் வைக்கப்பட்டுள்ளது.  அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் இவைகளை கடந்து செல்கிறது.

இதில் வேகமாக வரும் லாரிகள், மேம்பால பணிகள் நடப்பது அருகில் வந்த போதுதான் மாற்றுப்பாதை இருப்பது தெரிய வருகிறது. இதனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல், சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகிறது. அதேபோல் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் பகுதியில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி ஏகே சமுத்திரம் பகுதியில் மண் கொட்டப்பட்டு இருந்தது தெரியாமல், வேகமாக வந்து மண் திட்டு மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமானது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே, மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடத்தில், ஒளிரும் ஸ்டிக்கருடன் கூடிய, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: