குடியிருப்புகளுக்கான சிறப்பு முகாம்

நாமக்கல், ஏப்.13: நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் குடிசைமாற்று குடியிருப்புகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில் 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாமக்கல் நகராட்சியில் நிலவங்கி திட்டப்பகுதி-3, நிலவங்கி திட்டப்பகுதி-4 மற்றும் எருமப்பட்டி பேரூராட்சியில் நாக ராஜபுரம் திட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் (குடிசைமாற்று வாரியம்) அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் முறையே 960, 192 மற்றும் 240 என மொத்தம் 1,392 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.

இந்த குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வுசெய்ய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் 45 பேர் குடியிருப்புகளுக்கு விண்ணப்பம் அளித்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘நாமக்கல்லில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கான சிறப்பு முகாமில் நேற்று 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து இன்றும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இதனை வீடு இல்லாதோர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்த கட்டமாக ராசிபுரத்தில் சிறப்பு முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 இந்த குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பயனாளிகள் விண்ணப்பத்துடன் குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் பயனாளி மற்றும்  குடும்பத்தினருக்கு சொந்த வீடோ, நிலமோ இருக்கக்கூடாது. பயனாளி நகர பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: