திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை, ஏப்.2:திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அனைத்து ஒன்றியங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 153 தொடக்க, நடுநிலைப்பள்ளி உட்பட மொத்தம் 210 பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், உதவி உபகரணங்கள் வழங்குதல், அறுவை சிகிச்சை, தொடர் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தல் போன்றவை நடந்தது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கான உதவி உபகரணங்களை உடனுக்குடன் வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ேமலும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் குறித்த, சிறப்பு ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய ஆலோசனைகளை அளிக்க வேண்டும்’ என்றார்.முகாமில், மாவட்ட கல்வி அலுவலர் எல்.ஆரோக்கியசாமி, நகராட்சி தலைவர் நிர்மலாவேல்மாறன், துணை தலைவர் சு.ராஜாங்கம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயன், மலர்விழி, வட்டார மேற்பார்வையாளர் துரைசாமி மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியின் காது மூக்கு தொண்டை, எலும்புமுறிவு சிறப்பு பிரிவு உள்ளிட்ட 6 துறைகளின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த முகாமில் 555 குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Stories: