விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி சாலைமறியல் 2 கி.மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் லாரி மோதி படுகாயமடைந்த

வந்தவாசி, ஏப்.2:வந்தவாசி அருகே லாரி மோதி படுகாயமடைந்த விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் கல்குவாரி உள்ளது. இக்கல் குவாரிக்கு சொந்தமான லாரி நேற்று கற்களை ஏற்றி வரும்போது கல்குவாரியின் மெயின் கேட் வழியாக லாரி திரும்பியபோது, அவ்வழியாக வந்த பைக் மீது லாரி மோதியது. இதில், விவசாய நிலத்துக்கு சென்ற மாலையிட்டான் குப்பத்தை சேர்ந்த சக்தி(32) என்பவர் படுகாயமடைந்தார். கால் பகுதியில் காயமடைந்த அவரை உடனே அப்பகுதிமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து அவரது உறவினர்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வழியாக லாரி செல்வதை தடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, வந்தவாசி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலால் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Related Stories: