திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை ₹110ஐ தொட்டது வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சி

திருவண்ணாமலை, ஏப்.2: திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹110ஐ எட்டியதால் வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை எப்போதாவது ஒருமுறை உயர்த்தப்படும் என்ற நிலைமாறி, தங்கம் விலை நிர்ணயம் போல பெட்ரோல், டீசல் விலையும் தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தாமாகவே விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதயளவில் உச்சத்தை தொட்டு வருகிறது.பெட்ரோல், டீசல் விலையை அடிப்படையாக கொண்டு, சரக்கு வாகனங்களின் வாடகை, போக்குவரத்து கட்டணம் உயர்கிறது. காய்கறி முதல் கட்டுமான பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. எனவே, வாகனஓட்டிகள் மட்டுமின்றி, அனைத்துத்தரப்பினருக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.

5 மாநில தேர்தல் முடியும் வரை, பெட்ரோல் டீசல் விலை உயர்வை அறிவிக்காமல் வைத்திருந்த ஒன்றிய அரசு, தேர்தல் முடிந்ததும் விலையை அடுத்தடுத்து உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

திருவண்ணாமலையில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ₹109.25 என நிர்ணயிக்கப்பட்டது. மேலும், ஒரு லிட்டர் டீசல் ₹99.54 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பெட்ரோல் விலை ₹110, டீசல் விலை ₹100ஐ ெதாட்டிருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தற்போது படிப்படியாக மீண்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. நடுத்தர ஏழை எளிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் செலவு கணிசமாக அதிகரித்திருப்பது பெரும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. எனவே, பெட்ரோல் டீசல் விலையை உடனே கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: