செங்கம் அருகே 30 இருளர் இன குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க டிஆர்ஓ ஆய்வு

செங்கம், மார்ச் 26: செங்கம் அருகே உள்ள 30 இருளர் இன குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக டிஆர் ஓ ஆய்வு செய்து விரைவில் வழங்க உள்ளதாக தெரிவித்தார். செங்கம் வட்டத்திற்குட்பட்ட 300 மங்கலம் கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக 30க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் வசித்து வந்தனர். அவர்கள் வசித்த பகுதியில் அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. மேலும் அந்த பகுதி நீர் நிலை பகுதி என்பதால், நீதிமன்ற உத்தரவின் காரணமாக 30 குடும்பத்தினருக்கும் மாற்று இடம் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில், கடந்த 23ம் தேதி இருளர் பழங்குடியினர் மாற்று இடம் வழங்கக்கோரி செங்கம் தாசில்தார் அலுவலகம் முன் பட்டினி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த கோட்டாட்சியர் வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இதனையேற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆர்டிஓ வெற்றிவேல், தாசில்தார் முனுசாமி ஆகியோர் மங்களம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருளர் பழங்குடியினருக்கு மாற்று இடம் வழங்க ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து செங்கம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆர்டிஓ வெற்றிவேல், தாசில்தார் முனுசாமி ஆகியோர் தலைமையில் நில அளவையர். தலைமையிட வட்ட துணை தாசில்தார் தமிழரசி, விஏஓ விஜயகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து இருளர் இன 30 குடும்பங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் மாற்று இடம் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தெரிவித்தார்.

Related Stories: