இன்று காலை 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் 900 அரசு ஊழியர்கள் பங்கேற்பு; மதியத்துக்குள் முடிவுகள் வெளியாகும் வேலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி

வேலூர், பிப்.22: வேலூர் மாவட்டத்தில் 5 மையங்களில் இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 900 அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர். வாக்கு எண்ணும் பணி அமைதியாக நடக்க ஏதுவாக வாக்கு எண்ணும் மையங்களில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், திருவலம், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், பென்னாத்தூர் ஆகிய 4 பேரூராட்சிகளில் மொத்தம் 180 வார்டுகள் உள்ளன. இதில் வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் 8வது வார்டில் சுனில்குமார், 7வது வார்டு புஷ்பலதா வன்னியராஜா ஆகிய 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மீதமுள்ள 178 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 819 பதவிகளுக்கான வாக்குப்பதிவு 628 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 19ம் தேதி நடந்தது. எப்போதும் இல்லாத வகையில் வாக்குப்பதிவு வேலூர் மாவட்டத்தில் 66.68 சதவீதம் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அன்று இரவே பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

வேலூர் மாநகராட்சி வார்டுகளுக்கான வாக்கு எண்ணும் மையம் வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் வளாகத்திலும், பேரணாம்பட்டு நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையம் பேரணாம்பட்டு மேரிட் இஸ்மாயில் சாஹிப் கலை அறிவியல் கல்லூரியிலும், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சி வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை பள்ளிகொண்டா லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளி மற்றும் ஆர்சிஎம் பள்ளிகளிலும் நடக்கிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தடைந்தவுடன் அந்த அறைகளுக்கு அந்தந்த தேர்தல் நடந்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் முன்னிலையில் அறைகள் பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு டிஎஸ்பி தலைமையில் 45 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியத்துக்குள் முடிவுகள் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் கூட்ட நெரிசல் தடுக்க முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இந்த மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு டிஎஸ்பி தலைமையில் 200 போலீசார் என ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் வாக்கு எண்ணும் பணியில் 900 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் காலை 6 மணிக்குள் மையத்திற்கு வந்துவிட வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையில் எவ்வித தவறும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: