உள்ளாட்சி தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், பிப்.22: வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வேட்பாளர் கட்சியினர் பரபரப்புடன் காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் திமுக கூட்டணி ஒரு அணியாகவும் அதிமுக, பாஜ, தேமுதிக, மநீம, நாம் தமிழர் என பல்வேறு கட்சிகள் போட்டியிட்டனர். இதில் பிரதான அணியாக திமுகவே உள்ளது. திமுக அணிக்கு எதிராக பலமான அணியாக அதிமுகவை விட சுயேட்சைகள் ஏராளமான இடங்களில் உள்ளனர். மேலும் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக இருப்பதாக கூறியதால் பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் நிற்கும் இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தாமல் அல்லது டம்மியான வேட்பாளர்கள் நிற்க வைத்திருப்பதாக அக்கட்சி ஆதரவாக செயல்படும் குற்றச்சாட்டு எழுந்தது. இத்தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தலை போல் சுயேட்சை சின்னம் அடிப்படையில் இல்லாமல் கட்சி சின்னம் அடிப்படையிலான தேர்தல் என்பதால் வேட்பாளர்களின் வெற்றி தோல்வி கட்சியின் வெற்றி தோல்வி ஆகவே பார்க்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம் பேரணாம்பட்டு நகராட்சிகள், பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர் ஒடுகத்தூர் ஆகிய பகுதியில் 180 வார்டுகள் உள்ளது. இதில் 2 மாநகராட்சி வார்டுகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 178 வார்டுகளுக்கு 819 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வேலூர் மாவட்டத்தில் 19ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 66.65 சதவீதம் வாக்குகள் பதிவானது. வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் ஒருவரே மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவராக வர இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் அறிய வேட்பாளர்கள் மட்டுமின்றி கட்சியினரும், வாக்காளர்களும் பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.

Related Stories: