சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு வேலூர் சாய்நாதபுரத்தில்

வேலூர், பிப்.22: வேலூர் சாய்நாதபுரத்தில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் சாய்நாதபுரத்தில் தனியார் கல்லூரி பின்புறம் சாஸ்திரி நகர், கன்னிகாபுரம், கணபதி நகர், வசந்த் நகர், ஏ.எஸ்.நகர், முருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் தனியார் கல்லூரியை ஒட்டி உள்ள சாலையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. மேலும் சாலையை அடைத்து சுற்றுச்சுவர் கட்டுவதாக தகவல் வெளியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை வேலூர்-ஆரணி சாலை சாய்நாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே பதாகைகள் ஏந்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தல் முடிந்த பிறகு மாநகராட்சி மூலம் சாலை அமைக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

Related Stories: