வீதிவீதியாக சுற்றி வந்த தேர்தல் பறக்கும் படையினர் பெப்பே காட்டிய அரசியல் கட்சிகள் மாநகராட்சி 2வது மண்டலத்தில்

வேலூர், பிப்.18: வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் வீதிவீதியாக தேர்தல் பறக்கும் படையினர் அன்பளிப்பு மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பாக எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் வாக்காளர்களை தனித்தனியாக சந்தித்து வாக்கு சேகரித்தல், பணம் மற்றும் அன்பளிப்புகள் வழங்குவதில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேட்சைகளும் கூட சளைக்காமல் ஈடுபட்டு வருகின்றனர்.இதுபோன்ற தவறுகளை கண்டறிந்து தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக ரொக்கப்பணம், அன்பளிப்பு பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். அதேநேரத்தில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை ₹1.82 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பிற மாவட்டங்களில் ரொக்கப்பணமும், அன்பளிப்புகளும் ஏராளமாக கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் மிக குறைந்த அளவு ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் தேர்தல் பறக்கும்படையினருக்கும் பிரதான நெடுஞ்சாலைகளில் மட்டும் சோதனை நடத்தாமல், நகரின் உட்புற பகுதிகளுக்கும் சென்று சோதனை நடத்த அறிவுறுத்தினார்.அதன்படி தேர்தல் பறக்கும்படை அலுவலர் ெஷரீப், எஸ்எஸ்ஐ தட்சணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரம், வெங்கடாபுரம், லாலாதோப்பு, அழகிரி நகர், புதுத்தெரு, ஏரிக்கரை தெரு என பல்வேறு பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் தேர்தல் பறக்கும் படையினர் வீதிகளின் உட்புறம் இறங்கியதும், அனைத்து பட்டுவாடா நடவடிக்கைகளும் இல்லாமல் வீதிகள் அமைதியாக காட்சி அளித்தன. இதனால் பறக்கும் படையினருக்கு ஏதும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: