3 லோடுகள் வரை கற்கள் ஏற்றிச்சென்ற லாரி டிரைவர் கைது ஆர்டிஓ அதிரடி ஒரு லோடுக்கான பில்லை வைத்து

அணைக்கட்டு, பிப்.18: ஒரு லோடுக்கான பில்லை வைத்து மூன்று லோடுகள் வரை கற்கள் ஏற்றிச்சென்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஆர்டிஓ அதிரடியாக நடவடிக்கையால் நடந்தது. வேலூர் ஆர்டிஓ விஷ்ணுபிரியா நேற்று முன்தினம் அணைக்கட்டு தாலுகா கரடிகுடி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல் குவாரிகளை ஆய்வு செய்ய சென்றார். அப்போது குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றி வந்த ஒரு லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் ஆவணங்கள் முறையாக இல்லை என்பதும், இருக்கும் ஒரு ஆவணமும் ஒரு லோடுக்கு மட்டுமே அனுமதி பெற்று மூன்று லோடுகள் கற்களை ஏற்றி செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து வண்டியுடன் லாரி பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு, அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்திக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அதன்படி விஏஓ தங்கமுத்து டிரைவருடன் லாரியை பறிமுதல் செய்து அணைக்கட்டு காவல் நிலையத்தில் கொண்டு சென்றார். அப்போது போலீசார் கரடிகுடி பகுதி பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லையில் வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து லாரி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிந்து கரடிகுடி கிராமத்தை சேர்ந்த குப்பன்(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஆர்டிஓ விஷ்ணுபிரியா குவாரிக்கு சென்று அவர்கள் பயன்படுத்தும் பில்களை சரிப்பார்த்து ஆய்வு செய்தார். பின்னர், குவாரியில் அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்க வேண்டும். போலி பில் வைத்து கற்களை ஏற்றி செல்வது, காலாவதியான பர்மிட்களை வைத்து கற்களை ஏற்றி செல்ல அனுமதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என குவாரியின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது தாசில்தார் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, துணை தாசில்தார் திருகுமரேசன், விஏஓ தங்கமுத்து உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: