மாநகராட்சி, 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு 1,400 போலீசார் பாதுகாப்பு வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

வேலூர், பிப்.18:வேலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. மாநகராட்சி, 2 நகராட்சி, 4 பேரூராட்சிகிளல் நாளை வாக்குப்பதிவையொட்டி முன்னேற்பாடுககள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

வீடு வீடாக சென்று தாங்கள் போட்டியிடும் வார்டுகளில் ஆதரவு திரட்டி ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தேர்தல் பிரசாரத்துக்கு கடைசி நாளான நேற்று வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் நேற்று காலை முதல் வீதி, வீதியாக சென்று இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இன்று பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் ஆகிய பேரூராட்சிகளில் 178 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 819 பேர் போட்டியிட்டுள்ளனர். இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக 628 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாளை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது. அதையொட்டி, வேலூர் மாவட்டத்தில் 628 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 5 லட்சத்து 77 ஆயிரத்து 276 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதையொட்டி, பூத் சிலிப் வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளது.நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 3,101 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணை இன்று காலை வழங்கப்படுகிறது. பகல் 2 மணிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கபபட்டுள்ளது. மேலும், இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என மொத்தம் 628 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஏதேனும் திடீர் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்படாக பயன்படுத்த 100 மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பதற்றமான 91 வாக்குச்சாவடிகள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பதற்றமான 91 வாக்குச்சாவடிகளில் மட்டும் வெப்கேமரா பொருத்தப்பட்டு இணையதளம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் இன்று மாலை 5 மணிக்கும் சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 1,400 போலீசார் ஈடுபடுகின்றனர்.

Related Stories: