அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமித்து வீடு கட்ட அடித்தளம் அமைப்பு தாசில்தார் தலைமையில் அதிரடியாக அகற்றம் வேலூர் அடுத்த பெருமுகை மலைப்பகுதியில்

வேலூர், பிப்.17:வேலூர் அருகே பெருமுகை மலைப்பகுதியில் அரசின் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதற்கு அமைக்கப்பட்ட அடித்தளம் தாசில்தார் தலைமையில் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது.வேலூர் அடுத்த பெருமுகை மலைப்பகுதிகளில் ஏற்கனவே பல ஆண்டுகளாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதை தடை செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் போராடி வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருமுகை சிஎம்சி அவென்யூ பகுதியில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான மலைப்பகுதியில் அனுமதியின்றி சிலர் மொரம்பு மண்ணை லாரிகளில் தினந்தோறும் கடத்தி விற்பனை செய்வதாகவும், அந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான முயற்சி நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகார் கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு சென்றது.

இதுகுறித்து விசாரிக்க வேலூர் தாசில்தார் செந்திலுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, தாசில்தார் செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமுகையில் ஆய்வு செய்தார். அப்போது, அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வீடு கட்டுவதற்கான பணிகள் நடந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, வீடு கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும். ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று எச்சரித்தார்.ஆனாலும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில், தாசில்தார் செந்தில் தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் வீட்டின் அடிதளத்தை இடித்து அகற்றினர். தொடர்ந்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கலையரசன் மீது புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: