டெல்லி குடியரசு தின விழாவில் புறக்கணிப்பு தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

திருச்சி, ஜன. 29: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணி வகுப்பில் பங்கேற்க, தமிழக அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசால் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து சென்னை கடற்கரையில் தமிழக அரசு சார்பில் நடக்கும் குடியரசு தினவிழாவில் இடம்பெறும் தமிழ்நாடு ஊர்தி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்படுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார், பூலித்தேவன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், மருது சகோதரர்கள் ஆகியோரின் உருவங்கள், மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோயில் ஆகியவை அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்தது.

இந்த அலங்கார ஊர்தி சென்னையில் கடந்த 26ம் தேதி நடந்த குடியரசு தினவிழாவில் இடம் பெற்றது. பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை பெரம்பலூர் வழியாக திருச்சி மன்னார்புரம் வந்த அலங்கார ஊர்திக்கு திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த ஊர்தியை பொது மக்கள் திரளாக வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அலங்கார ஊர்தி மதுரை புறப்பட்டு சென்றது.

Related Stories: