திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது

திருவாரூர், ஜன.29: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் முதல் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் ஏதும் நடைபெறாததால் தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி தேர்தல் (பிப்ரவரி 19ம்தேதி) நடைபெறுவதை முன்னிட்டு நேற்று (28ம் தேதி) வேட்புமனு தாக்கல் துவங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி என 4 நகராட்சி பகுதிகள் மற்றும் பேரளம், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி மற்றும் முத்துப்பேட்டை என 7 பேரூராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்களை பெறுவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் போன்றவை நேற்று முன்தினமே ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று முதல் வேட்பு மனுக்களை பெறுவதற்காக அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

மேலும் இந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவாரூர் நகராட்சி பகுதிக்கு 50 விண்ணப்பமும், மன்னார்குடி 40, கூத்தாநல்லூர் 15 மற்றும் திருத்துறைப்பூண்டி 53 என மொத்தம் 163 வேட்பு மனு விண்ணப்பங்களை அரசியல் கட்சியினர் மற்றும் சுயட்சை வேட்பார்கள் பெற்றுச் சென்றனர். இதேபோல் பேரூராட்சி அலுவலங்களிலும் விண்ணப்பங்கள் பெற்று செல்லப்பட்டன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் நேரமான காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் வேட்பு மனுக்களை பெறுவதற்காக அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தும் மாலை வரையில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யப்படாததால் முதல் நாளான நேற்று தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளில்போட்டியிடும் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் என 28 பேர் தேர்தல் அலுவலர்களிடம் நேற்று வேட்புமனுக்களை வாங்கிச்சென்றனர். இதனால் பரபரப்புடன் நேற்று காணப்பட்டது. இந்தநிலையில் தேர்தலை முன்னிட்டு பேரூராட்சி வளாகம் மற்றும் வெளியில் பகுதியில் பேரிக்காடு அமைத்து முத்துப்பேட்டை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: