திருவாரூர் மாவட்டத்தில் இன்று 402 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

திருவாரூர், ஜன.29: திருவாரூர் மாவட்டத்தில் இன்று 402 மையங்களில் நடைபெறும் 20ம் கட்ட மெகா சிறப்பு முகாமில் 40 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றினை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அரசின் சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம்ங்கள் போன்றவற்றின் மூலம் தினந்தோறும் நடைபெற்று வரும் நிலையில் வாரம் ஒரு முறை மெகா சிறப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (29ந் தேதி) 20ம் கட்டமாக மாநிலம் முழுவதும் இந்த மெகா சிறப்பு முகாமானது நடைபெறுகிறது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 244 மையங்களிலும், நகரப்பகுதிகளில் 40 மையங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 18 மையங்களிலும் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 தாலுக்கா மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் மற்றும் 40 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 402 மையங்கள் மூலம் 40 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாகவுள்ளதால் இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் முதல் தவணை செலுத்தி 2ம் தவணை செலுத்திகொள்ள வேண்டியவர்கள் மற்றும் இரு தவணையும் செலுத்திகொண்டு 9 மாதங்களை கடந்த முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60வது வயதை கடந்தவர்கள் என அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுவதாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: