காரில் கடத்திய ரூ.1.20 லட்சம் புகையிலை, குட்கா பறிமுதல் 3 பேர் கைது; தப்பி ஓடியவருக்கு வலை

பள்ளிகொண்டா, ஜன.29: பள்ளிகொண்டா டோல்கேட்டில் நள்ளிரவில் போலீசார் நடத்திய சோதனையில் சென்ைனக்கு காரில் கடத்திய ரூ.1.20 லட்சம் புகையிலை, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருவள்ளூரைச் சேர்ந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா டோல்கேட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு பள்ளிகொண்டா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் காரை பின்தொடர்ந்தனர். இதற்கிடையில் சிறிது தூரம் சென்று நின்ற காரில் இருந்து குதித்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் காரில் இருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து காரில் சோதனை செய்தபோது, 10 பிளாஸ்டிக் மூட்டைகளில் புகையிலை பொருட்களும், 8 மூட்டைகளில் குட்கா பொருட்களும் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், மணவாளன் நகர் கருணாநிதி தெருவை சேர்ந்த ரமேஷ்(27), மனோரி(26) மற்றும் பெங்களூரு சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த சுனில்(26) என்பதும் தெரியவந்தது. இதில் புகையிலை மற்றும் குட்கா கடத்த பயன்படுத்திய கார் ரமேஷிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து ஆம்பூருக்கு மொத்தமாக புகையிலை பொருட்கள் லோடு வந்தது.

அதில், சென்னை பூந்தமல்லி பகுதிக்கு சேர வேண்டிய சரக்கினை கார் மூலம் கொண்டு செல்லும்போது போலீசாரிடம் சிக்கியதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய ராஜஸ்தானை சேர்ந்த சத்தியபால் என்பவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 250 கிலோ எடையுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களின் ரூ.1.20 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆம்பூரில் எந்த இடத்துக்கு மொத்தமாக புகையிலை, குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டது? எந்தெந்த பகுதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும், முக்கிய குற்றவாளி யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: