அரவைக்கு உரிய தொகை ரூ.100 கோடி வழங்க கோரி கையில் கரும்புடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்,ஜன.29: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரவைக்கு அளித்த கரும்பிற்குரிய தொகை ரூ.100 கோடியை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் கைகளில் தேசிய கொடி, கரும்பு, பட்டை நாம சின்னம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டத்தை காரணம் காட்டி மூடப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவை தொகை ரூ.100 கோடி இதுவரை வழங்கவில்லை.

அதனை வட்டியுடன் திரும்ப வழங்கிட வேண்டும். அதுபோல ஆலை நிர்வாகம் மோசடியாக, கரும்பு விவசாயிகள் பெயரில் வங்கிகள் மூலம் ரூ.500 கோடி வரை கடன் பெற்று இதுவரை திரும்ப செலுத்தாததால் விவசாயிகள் பெயரிலான கடன் வங்கிகள் அப்படியே நிலுவை உள்ளதால் கரும்பு விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு மோசடியாக கடன் பெற்ற ஆலை நிர்வாகத்தினர், மோசடிக்கு உடைந்தையாக இருந்த வங்கி நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். விவசாயிகள் நலன் கருதி, ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஏராளமான கரும்பு விவசாயிகள் கையில் தேசிய கொடி, கரும்பு மற்றும் பட்டை நாம சின்னத்துடன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: