வாரச்சந்தை கடைகளில் தராசுகளில் முத்திரை பதிக்காத எடைக்கற்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்

க.பரமத்தி, ஜன.29: வாரசந்தைகளில் கடைகளில் பயன்படுத்தும் தராசுகளில் முத்திரை பதிக்காத எடைக் கற்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். வணிக நிறுவனத்தினர் பயன் படுத்தும் எடைக் கருவியில் கட்டாயம் முத்திரை பதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவை சரியான எடையில் உள்ளது என்பதை உறுதி செய்யவே முத்திரையிடப்படுகிறது. வணிக நிறுனங்களில் பயன்படுத்தப்படும் எடைக் கருவிகள், எடைக் கற்கள் ஆகியவற்றை தொழிலாளர் துறையினர் ஆய்வு செய்து முத்திரை இடுவார்கள்.

எடைக் கற்களின் பின்புறம் தேதி, மாதம், ஆண்டு ஆகியவை முத்திரையில் இருக்கும். மின்னணு எடை இயந்திரம், மேடை தராசு ஆகியவற்றை ஆண்டுக்கு ஒரு முறை தொழிலாளர்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று முத்திரையிட வேண்டும். முத்திரை இடப்படாத எடைக் கற்கள் பயன்படுத்துவது அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தால், எடைக்கற்களை பறிமுதல் செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கமாக இருந்தன. க.பரமத்தி செவ்வாய் வார சந்தையில் ஒரு சில கடைகளில் பல ஆண்டுக்கு முன்பு முத்திரை பதித்த எடைக் கற்களை வியாபாரிகள் பயன் படுத்தி பயன்படுத்தி வருவதாக பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது.

கடைக்காரர்கள் முத்திரையிடாத எடைக் கற்களை பயன்படுத்துவதால் எடை குறைப்பு அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மறைமுகமாக ஏமாற்றப்படுகின்றனர். எனவே துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதி கடைகளில் உள்ள எடைக் கற்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: