நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெல்லையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நெல்லை, ஜன. 29: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சிக்கு 55 வார்டுகளுக்கும்,  அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு 21 வார்டுகளுக்கும், விக்கிரமசிங்கப்புரம் நகராட்சிக்கு 21 வார்டுகளுக்கும், களக்காடு நகராட்சிக்கு 27 வார்டுகளுக்கும் , 17 பேரூராட்சிகளுக்கு 273 வார்டுகளுக்கும் என மொத்தம்   397 வார்டுகளுக்கு பிப்.19ம் தேதி தேர்தல் நடக்கிறது.

தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை கண்காணிக்க நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் ஒரு சிப்ட்டுக்கு 3 பணியாளர்கள் வீதம் 3 சிப்ட்டுக்கு  சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த கட்டுப்பாட்டு அறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க  0462-2500262 என்ற தொலைபேசி எண்ணும்  74029-08464 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதுபோன்று மாநகராட்சியிலும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்களை  கட்டணமில்லா தொலைபேசி எண் 18004254656  என்ற எண்ணிலும்  04622329328 என்ற தொலைபேசி எண்ணிலும், 9489930261 என்ற கைபேசி எண்ணிலும் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார். நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால், பிடிஓ (தேர்தல்) கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தேர்தல் பணி ஆணைகள் தயார்

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பணியில் 3 ஆயிரத்து 728 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில்  தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கான பயிற்சிக்கு  அழைப்பு ஆணை தயார் செய்யப்பட்டு பிரித்து அனுப்பும் பணிகளையும் கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

Related Stories: