சேலம் மாவட்டத்தில் 1,377 துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

சேலம், ஜன.29:சேலம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி  லைசென்ஸ் பெற்ற1,377  துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் இதுவரை 400 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அச்சுறுத்தல் உள்ள நபர்கள் போன்றோர் அரசின் அனுமதியுடன் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருக்கின்றனர். தேர்தல் காலத்தில், இந்த துப்பாக்கிகளை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக தளர்த்தப்பட்டபின், மீண்டும் அந்த துப்பாக்கிகளை உரிய நபர்களிடம் போலீசார் ஒப்படைப்பார்கள்.

இந்த வகையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், லைசென்ஸ் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் அறிவுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் லைசென்ஸ் பெற்ற 1,377  துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இதனை வைத்திருக்கும் நபர்கள், சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வரும் 31ம் தேதிக்குள் ஒப்படைக்கும் படி மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பேரில், ஆத்தூர், தலைவாசல், வாழப்பாடி, கருமந்துறை, ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி, ஆட்ைடயாம்பட்டி என மாவட்டம் முழுவதும் உள்ள ஸ்டேஷன்களில், பல்வேறு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் தங்களின் துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர். நேற்று மாலை வரை 400 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் அனைத்து துப்பாக்கிகளையும் பெற்று, பாதுகாப்பான முறையில் வைத்துவிடுவோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: