தேர்தல் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

சேலம், ஜன.29:சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்களுக்கு நடக்கிறது. மொத்தமாக 699 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 1,519 வாக்குச்சாவடிகளில் வரும் பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அந்தந்த பகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கவும், விவரங்களை கேட்டு தெரிந்துக்கொள்ளவும் சேலம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி 18004256077 என்ற எண்ணிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி 0427-2414200 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான விவரங்களை கேட்டுத்தெரிவதோடு, விதிமீறல் புகார்களை தெரிவிக்கலாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வந்து பணியில் இருக்க வசதியாக 3 ஷிப்ட் என்ற அடிப்படையில் ஒரேநேரத்தில் 21 பறக்கும் படையினர் பணியில் உள்ளனர். இவர்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் விதிமீறல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: