சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி 60 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

சேலம், ஜன.29: சேலம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி  60 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்நாளில் 4 மண்டலங்களிலும் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளுக்கு பிப்.19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. பிப்.4ம் தேதி மனுதாக்கல் செய்ய இறுதிநாள், பிப்.5ம் தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு, பிப்.7ம் தேதி வேட்பு மனு திரும்ப பெறுதல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.இந்தவகையில் சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் 3,57,101 ஆண்கள், 3,72,479 ெபண்கள், 103 இதரர் என்று மொத்தம் 7,29,683 வாக்காளர்கள் உள்ளனர்.

வேட்பு மனு தாக்கலையொட்டி நேற்றுமுன்தினம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து 4 மண்டல அலுவலகத்திற்கும் வேட்பு மனு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டது.முன்னதாக மனுதாக்கல் செய்ய வந்தவர்கள் மற்றும் வேட்பு மனு பெற வந்தவர்களிடம் வெப்பமானி கொண்டு உடல் வெப்ப அளவு எடுக்கப்பட்டது. பின்னர் கிருமிநாசினி, முகக்கவசம் வழங்கப்பட்டது. நேற்று முதல் நாளில் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் பாரத மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்தார். 4 மண்டல அலுவலங்களிலும் வேட்பு மனு விநியோகம் மும்முரமாக நடைபெற்றது. வேட்பு மனு தாக்கலையொட்டி 4 மண்டல அலுவலகத்திலும் 100, 200 மீட்டர் தொலையில் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஆத்தூர், இடங்கணசாலை, நரசிங்கபுரம், தாரமங்கலம், மேட்டூர், இடைப்பாடி ஆகிய 6 நகராட்சிகளிலும், 31 பேரூராட்சிகளிலும் வேட்பு மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.

டெபாசிட் தொகை எவ்வளவு?

நகர்ப்புற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த உள்ளாட்சிக்கு, எவ்வளவு டெபாசிட் தொகை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் பொதுப்பிரிவினருக்கு ₹4,000மும், எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ₹2,000 டெபாசிட் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நகராட்சிகளில் போட்டியிடும் பொதுப்பிரிவினர் ₹2,000, எஸ்சி., எஸ்டி பிரிவினர் ₹1,000மும், பேரூராட்சிகளில் போட்டியிடும் பொதுப்பிரிவினர் ₹1,000மும், எஸ்சி., எஸ்டி பிரிவினர் ₹500ம், டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும். தேர்தல் முடிவில், மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கு பெற்றவர்களுக்கு, இந்த டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: