முத்துகாபட்டி பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கோபுரம் திறப்பு

சேந்தமங்கலம், ஜன.29: சேந்தமங்கலம் அடுத்த முத்துகாபட்டி ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் காவல்துறை சார்பில், கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் அருள் ராஜேஷ் தலைமை தாங்கினார். பிடிஓக்கள் குணாளன், பிரபாகர், தாசில்தார் சுரேஷ் முன்னிலை வகித்தனர். இதில் ஓய்வுபெற்ற ஐஜி பாரி, அமெரிக்கா வாழ் தமிழர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு கண்காணிப்பு கோபுரத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஐஜி பாரி பேசுகையில், ‘ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி பகுதி முழுவதும் 120 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, இந்த கண்காணிப்பு கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி மூலம் நடமாட்டத்தை கண்காணிக்க முடிகிறது.

இதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும். ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுபோன்ற கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்தினால், குற்றங்கள் தவிர்க்கப்படும். வீட்டில் தனியாக உள்ள பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபர்கள் வீட்டுக்கு வந்தால், திருப்பி அனுப்ப வேண்டும்,’ என்றார். நிகழ்ச்சியில் நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், கண்காணிப்பு கோபுரம் உபயதாரர்கள் சாந்தி ராஜ்குமார், தினேஷ் விஜய், ஊராட்சி துணை தலைவர் வரதராசு, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: