மாற்றுத்திறனாளி இறந்த வழக்கில் சேந்தமங்கலம் ஸ்டேஷனில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சேந்தமங்கலம், ஜன.29: கொலை வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி இறந்த சம்பவம் குறித்து, சேந்தமங்கலத்தில் சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார்(45), நரிப்பள்ளியைச் சேர்ந்த மதிவாணன்(58), சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன்(45), அவரது மனைவி அம்சலா(43) ஆகியோரை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் பிரபாகரனுக்கு, கடந்த 12ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், பிரபாகரன் உயிரிழந்தார். இதையடுத்து சேந்தமங்கலம் எஸ்ஐ சந்திரன், புதுச்சத்திரம் எஸ்ஐ பூங்கொடி, நல்லிபாளையம் ஏட்டு குழந்தைவேல் ஆகிய 3 பேரை, டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் -5 மாஜிஸ்ட்ரேட் அன்பு, சேந்தமங்கலம் காவல் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்தது. நேற்று சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் போலீசார், இறந்து போன பிரபாகரனின் மனைவி அம்சலாவை அழைத்துக்கொண்டு சேந்தமங்கலம் வந்தனர். அவர்கள் காவல் நிலையம், யூனியன் ஆபீஸ் அருகே உள்ள காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

திருச்செங்கோடு நகராட்சியில்

பெண் வாக்காளர்கள் அதிகம்திருச்செங்கோடு, ஜன.29:  திருச்செங்கோடு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. கடைசியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி மொத்த வாக்காளர்கள் 79,846 ஆகும். இதில் பெண்கள் 41,121 பேர், ஆண்கள் 38,692 மற்றும் திருநங்கைகள் 33 பேர் ஆகும். திருச்செங்கோடு நகராட்சியில் ஆண் வாக்காளர்களை விட 2,329 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். இதில் 8வது வார்டு 3,527 வாக்காளர்களை கொண்டு பெரிய வார்டாக உள்ளது. மிகச்சிறிய வார்டாக 30வது வார்டில் 1,520 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 7வது வார்டில் 30 திருநங்கைகள் உள்ளனர். 5வது வார்டில் ஆண்கள், பெண்கள் சரிசமமாக உள்ளனர். திருச்செங்கோடு நகராட்சிியல் 3, 6, 7, 11, 13, 15, 16, 17, 19, 20, 21, 23, 24, 25, 26, 29 மற்றும் 30 ஆகிய 17 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: