ஓசூர் மாநகராட்சியில் முதல் நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல்

கிருஷ்ணகிரி, ஜன.29: ஓசூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட, முதல் நாளில் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், நாகோஜனஹள்ளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகள் என மாவட்டத்தில் 8 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற

உள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகள், ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள், பர்கூர், காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஹள்ளி, உத்தனப்பள்ளி ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் என மொத்தம் 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. நேற்று ஓசூர் மாநகராட்சியில் 38-வது வார்டுக்கு ஒருவரும், 42-வது வார்டுக்கு ஒருவரும் என 2 வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். மனுத் தாக்கல் செய்ய வருகிற 4ம் தேதி கடைசி நாளாகும்.

2,21,498 வாக்காளர்கள்; 248 சாவடிகள் அமைப்பு

ஓசூர் மாநகராட்சிக்கு இது முதல் மேயர் பதவி தேர்தல் என்பதால் அப்பதவியை கைப்பற்றுவதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 1,13,292 ஆண் வாக்காளர்களும், 1,08,109 பெண் வாக்காளர்களும், இதரர் 97 பேர் என மொத்தம் 2,21,498 வாக்காளர்கள்உள்ளனர். அவர்கள் வாக்களிக்க ஏதுவாக 248 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், 47 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு, அரசு வழிகாட்டுதல்படி அனைத்து முன்னேற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன,’ என்றார்.

Related Stories: