வேட்பு மனு தாக்கலை கேமரா பொருத்தி கண்காணிப்பு

திருப்பூர், ஜன.29:  மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியதையடுத்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி துவங்கியது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் நேற்று முதல் கவுன்சிலர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெற, மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்களில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மனுத்தாக்கலின்போது, உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கவும், தேவையற்ற கூட்டம் கூடுவது போன்றவையும், அசம்பாவிதங்கள் தவிர்க்கும் வகையிலும், உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மனுக்கள் பெறப்படும் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் வினியோகிக்கும் பகுதி, மனுத்தாக்கல் செய்யும் இடம், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பணியாற்றும் இடம், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் வந்து செல்லும் பகுதி ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர் அறை மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இதன் பதிவுகள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்களில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. மேலும், வேட்புமனுதாக்கலுக்கான விண்ணப்பம் பெற வந்தவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்ட பின்னரே, அலுவலங்களில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: