குடியரசு தினவிழா அலங்கார ஊர்திக்கு அவினாசியில் மலர்தூவி வரவேற்பு

திருப்பூர், ஜன.29:  சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் பங்கேற்று, பொதுமக்களின் பார்வைக்காக அவினாசிக்கு வந்த அலங்கார ஊர்தியை, கலெக்டர் வினீத் மலர்தூவி வரவேற்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயர்களை வீரமுடன் எதிர்கொண்ட, தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வ.உ.சிதம்பரனார், ஞானபானு, தியாகி சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரி  ஆகியோர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்ட 3 அலங்கார ஊர்திகளை பார்வையிட்டார்.

இந்த அலங்கார ஊர்தி, கோவை வஉசி பூங்கா அருகில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கோவை, ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்த ஊர்திகளை  காட்சிப்படுத்தும் வகையில், கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த வகையில் சென்னையில் இருந்து கோவைக்கு சாலை மார்க்கமாக  வந்த ஊர்தி நேற்று அவினாசியை வந்தடைந்தது. ஊர்தியை மாவட்ட கலெக்டர் வினீத் மலர்தூவி வரவேற்றார். நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பொதுமக்கள், கட்சியினர் பலரும் உற்சாகமாக மேள, தாளங்கள் முழங்க ஊர்தியை வரவேற்றனர். இதனை தொடர்ந்து  அலங்கார ஊர்தி கோவைக்கு சென்றது.

Related Stories: