திருத்தணி, ஊத்துக்கோட்டையில் முதல் நாளில் யாரும் மனு அளிக்கவில்லை

திருத்தணி, ஜன.29: திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டையில் முதல் நாளான ேநற்று ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் மொத்தம் 42 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 18,070 ஆண்கள், 19393 பெண்கள், 8 இதரர் என மொத்தம் 37471 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலராக ராமஜெயம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 17 வார்டுகளுக்கு முரளி, 814 வார்டுகளுக்கு மணி மற்றும் 1521 வார்டுகளுக்கு பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று வேட்பு மனு தாக்கல் நகராட்சி அலுவலகத்தில் துவங்கியது.

ஆனால் நேற்று மாலை வரை திமுக, அதிமுக உள்பட பிற கட்சி வேட்பாளர்கள் என யாரும் முதல் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இதனால் நகராட்சி அலுவலகம் கூட்ட நெரிசலின்றி வெறிச்சோடி கிடந்தது. ஊத்துக்கோட்டை: இதேபோல், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், ஆண் வாக்காளர்கள் 5,003 பேரும், பெண் வாக்காளர்கள் 5,459 பேரும், இதர வாக்காளர் 1 என மொத்தம் 10,463 வாக்காளர்கள் உள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பொது வார்டு 6, ஆதிதிராவிடர் பெண் 1, ஆதிதிராவிடர் பொது 1, பெண்கள் மட்டும் 7 என மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.

நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அங்கும் கூட்ட நெரிசலின்றி காணப்பட்டது. திங்கட்கிழமை அமாவாசை என்பதால் அன்று வேட்பு மனு தாக்கல் செய்வது சூடுபிடிக்கும் என தெரிகிறது.

Related Stories: