நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாவட்டத்தில் 23 இடங்களில் இன்று வேட்பு மனு பெறப்படுகிறது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் உள்ள 447 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று (28ம்தேதி) வேட்பு மனுதாக்கல் துவங்குகிறது. 5 நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 19 பேரூராட்சி அலுவலங்கள் என மொத்தம் 23 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுலவர்களும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, நகராட்சி பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பெறப் படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையெட்டி, அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் அறிவிப்பின்படி, மாதிரி நடத்தை விதி நகர்ப்புற பகுதிகளுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கு அருகில் உள்ள பகுதிகளில் 5.கி.மீ. சுற்றளவு வரையும் பொருந்தும். அரசியல் கட்சியினர் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிற வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக பயன்படுத்தக்கூடாது.

அனுமதியின்றி பொது கூட்டங்களையோ அல்லது ஊர்வலங்களையோ நடத்தக்கூடாது. உள்ளரங்க கூடங்களில் நடத்தும் கூட்டங்களுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சாலைகள், ரவுண்டானாக்கள், தெருக்களில் கூட்டம் நடத்த அனுமதியில்லை. மறைந்த முன்னாள் தேசிய தலைவர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் திருவுருவ சிலைகளை மறைக்க தேவையில்லை. அனுமதி பெற்ற வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கிகள் காலை 6 மணியில் இருந்து இரவு 8 வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் வேட்பாளர்கள் முகாம் அலுவலகம் அமைக்கப்படக்கூடாது.

கொரோனா தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வேட்பாளர்களின் அலுவலகம் சுவரொட்டிகள், கொடிகள் அல்லது வேறு பிற பிரசார பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும். இம்முகாம்களில் தின்பண்டங்களை விநியோகிக்கவோ அல்லது மக்கள் கூடுவதை அனுமதிக்கவோ கூடாது. உள்ளாட்சிகளில் நலத்திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு புதிதாக நிதி விடுவிக்கப் படுவதும், பணி ஒப்பந்தங்கள் வழங்குவதும் கூடாது. ஏற்கனவே பணி ஆணைகள் வழங்கப்பட்டு இருந்தாலும், அப்பணியை ஆரம்பிக்க கூடாது. தேர்தல் நடைமுறை முடிவு பெற்ற பின்னரே இத்திட்டப்பணிகள் தொடங்கப்பட வேண்டும்.

உரிய அனுமதி பெற்று களத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுவிட்ட பணிகளை தொடரலாம். பணம் கொடுத்தோ, இதர வழிகளிலோ வாக்காளர்களை தூண்டுவது கூடாது. மற்றும் தேர்தல்கள் நடைபெறும் போது மது விநியோகிக்க கூடாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், மாவட்ட திட்ட இயக்குனர் வடிவேல், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் கோவிந்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: