தொழில் முனைவோர் திட்டத்தில் பயன்பெற வேளாண் பொறியியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு; கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 82 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் இளநிலைவேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக்கும் நோக்கில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ₹1 லட்சம் வீதம் 5 பயனாளிகளுக்கு ₹5 லட்சம் வழங்க நிதி இலக்கீடு பெறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரிகள் தங்களின் தகுதிக்கேற்ப இந்த திட்டத்தில் இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், காளான் உற்பத்தி செய்தல், பசுமைக்குடில் அமைத்தில், இயந்திர வாடகை மையம் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், அக்ரி கிளினிக் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண் விளை பொருட்கள் ஏற்றுமதி செய்தல் மற்றும் இதர வேளாண் தொடர்பான திட்டங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இதற்கான வயது வரம்பு 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்கக் கூடாது. கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நிலம் மற்றும் தளவாட உட்கட்டமைப்பிற்கான செலவுகள் திட்ட அறிக்கையில் சேர்க்கக் கூடாது. விரிவான திட்ட அறிக்கையுடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இளங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியின் மூலம் கடன் பெறின், அதற்கான ஒப்புதல் ஆவணங்களை இணைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு, விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும், திட்ட அறிக்கை மற்றும் சம்மந்தப்பட்ட ஆவணங்களை, வரும் பிப்ரவரி 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: