சிப்காட் அமைக்க கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் தர்ணா

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குருபரப்பள்ளி அருகே அரசு சார்பில் சிப்காட் அமைக்க 120 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள சிலரிடம் இருந்து 60 ஏக்கர் நிலத்தை, சிப்காட் நிறுவனம் கையகப்படுத்தி, தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனம் சார்பில் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கண்ட நிலத்தில் விவசாயம் செய்து வரும் 32 குடும்பங்களைச் சேர்ந்த விவசாயிகள், குடும்பத்துடன் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் குருபரப்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ‘60 ஏக்கர் நிலத்தில் பல தலைமுறையாக 32 குடும்பங்களை சேர்ந்த நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக நில அனுபவ சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், எங்கள் அனுமதியின்றி சிப்காட்டுக்கு நிலம் வழங்கி விட்டனர். இதனால் நாங்கள் வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எங்களுக்கு உரிய இழப்பீடும், புதியதாக அமைக்கப்படும் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: