நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் விடுபட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், வரும் பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை ஆகிய 6 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 1,11,284 ஆண் வாக்காளர்களும், 1,05,913 பெண் வாக்காளர்களும், 95 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,17,292 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 248 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 26,910 ஆண் வாக்காளர்கள், 28,520 பெண் வாக்காளர்கள், ஒரு இதரர் என மொத்தம் 55,431 வாக்காளர்கள் வாக்களிக்க 66 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பர்கூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 7,129 ஆண் வாக்காளர்கள், 7307 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 14,436 வாக்காளர்களுக்கு 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை நகராட்சியில் 18 வார்டுகளில் 10,676 ஆண் வாக்காளர்கள், 10,603 பெண் வாக்காளர்கள், 2 இதரர் என மொத்தம் 21,281 வாக்காளர்களுக்கு 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 6,317 ஆண் வாக்காளர்கள், 7,029 பெண் வாக்காளர்கள், 2 இதரர் என மொத்தம் 13,348 வாக்காளர்களுக்கு 18 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 5,718 ஆண் வாக்காளர்கள், 6 ஆயிரத்து 7 பெண் வாக்காளர்கள், இதரர் 5 என மொத்தம் 11,730 வாக்காளர்களுக்கு 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நாகோஜனஅள்ளி பேரூராட்சியில், 15 வார்டுகளில் 4,083 ஆண் வாக்காளர்கள், 4,238 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8,321 வாக்காளர்களுக்கு 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 7,844 ஆண் வாக்காளர்கள், 8,382 பெண் வாக்காளர்கள், இதரர் 18 என மொத்தம் 16,244 வாக்காளர்கள் வாக்களிக்க 18 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 171 வார்டுகளில், 1,79,901 ஆண் வாக்காளர்கள், 1,77,999 பெண் வாக்காளர்கள், 123 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3 லட்சத்து 58 ஆயிரத்து 83 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 424 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை ஆகிய 5 பேரூராட்சிகளில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: