இருதரப்பினர் மாறி, மாறி புகார் கொலை மிரட்டல் விடுக்கும் திருநங்கை மீது நடவடிக்கை

சேலம்: சேலத்தில் கொலை மிரட்டல் விடுத்துவரும் திருநங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதியில் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் சிலர், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் ஆண்களை மடக்கி, பணம் பறித்து செல்வதாக புகார் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர போலீசார், திருநங்கைகளை அழைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். இதுதொடர்பாக புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 5 ரோடு எஸ்பிஐ காலனியில் திருநங்கைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு திருநங்கைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திருநங்கைகளில் ஒரு தரப்பினர், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அப்போது, தங்களை தாக்கிய திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மற்றொரு தரப்பை சேர்ந்த திருநங்கைகள், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்,‘‘சேலம் 5 ரோடு பகுதியில் வசிக்கும் திருநங்கை ஒருவர், அடிக்கடி திருநங்கைகளை அடித்து துன்புறுத்துகிறார். நேற்று முன்தினம் அங்குள்ள கடை முன்பு அந்த திருநங்கை மற்ற திருநங்கைகளை பாலியல் தொழில் செய்து பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். பயந்து நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். நீங்கள் வரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று திருநங்கை மிரட்டியுள்ளார். இந்த காட்சி அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த திருநங்கையோடு சேர்ந்து ஒரு சில திருநங்கைகள், எங்களை வீட்டுக்கு செல்ல விடுவதில்லை.

கொலை மிரட்டல் விடுக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே  மற்றொரு தரப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். எதிர் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களும் புகார் மனு கொடுத்தனர். அதன் பேரிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: