சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 63 பறக்கும் படைகள் அமைப்பு

சேலம்:சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடக்கிறது. இதில், சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நரசிங்கபுரம், இடைப்பாடி, மேட்டூர், இடங்கணச்சாலை, தாரமங்கலம் ஆகிய 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று (28ம் தேதி) தொடங்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வகையில், மாவட்டம் முழுவதும் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், இவர்களுக்கு 3 ஷிப்ட் என்ற அடிப்படையில் பணி பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒரேநேரத்தில் 21 பறக்கும் படையினர் பணியில் இருப்பார்கள். இந்த பறக்கும்படையில், தாசில்தார் அல்லது துணை தாசில்தார் பதவியில் ஒரு அதிகாரியும், 2 போலீசார், ஒரு வீடியோகிராபர் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், தேர்தல் நடக்கும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரோந்து சுற்றி வருவார்கள். புகார்கள் வரும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று சோதனை நடத்தவுள்ளனர்.

ஓட்டுக்காக பணம், பரிசு பொருட்கள் சப்ளை செய்யப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி ₹50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் சென்றால், அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் முன் ஒப்படைத்து முறையாக கருவூலத்தில் சேர்ப்பார்கள். அதேபோல், எம்மாதிரி சோதனைகளை நடத்த வேண்டும் என்பது குறித்தும், சோதனையின் போது நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், தேர்தல் விதிமீறலில் ஈடுபடுகின்றனரா? என்பதையும் பறக்கும் படை அலுவலர்கள் கண்காணித்து மேல் நடவடிக்கை எடுப்பார்கள். தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை பின்பற்றி பிரசாரத்தை கட்சியினர், சுயேச்சைகள் மேற்கொள்கிறார்களா? என்பதையும் கண்காணிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பறக்கும் படை எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார்களை ஒப்படைக்க உத்தரவு: சேலம் மாவட்டத்தில் அரசு வாகனத்தை பயன்படுத்தி வரும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், ஒன்றியக்குழு தலைவர்கள், அதனை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் இன்று மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவுள்ளன. இவ்வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: