தொழில் முனைவோர் பயன்பெற வாய்ப்பு

சிவகங்கை: தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மையத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மையத் திட்டம் தேசிய சிறு தொழில் கழகத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் மானியங்கள் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படும் பொருட்களில் 4 சதவீதம் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இயந்திர மதிப்பீட்டில் 25 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை அளிக்கப்படுகிறது. பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு வங்கிக்கடன் விண்ணப்ப பரிசீலனை கட்டணம் மற்றும் வங்கி உத்தரவாத கட்டணங்களில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்ப பயிற்சி கட்டணம் 100 சதவீத மானியமாக அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்கப்படும் கருவித்தொகுப்பிற்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.

எனவே, பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: