முதுமலையில் வனத்தீ ஏற்படாமல் இருக்க சாலையோர புதர்செடிகளை அகற்றும் பணி தீவிரம்

ஊட்டி:  முதுமலையில் வனத்தீ ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையோர புதர்செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி  மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ. பரப்பளவில்  அமைந்துள்ளது. இங்கு புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள், மான்கள்,  புலிகள், கரடிகள், காட்டுமாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகை வன விலங்குகள்  உள்ளன. இதுமட்டுமின்றி விலையுயர்ந்த மரங்கள், அரிய வகை தாவரங்கள்  போன்றவைகளும் உள்ளன. இந்த சூழலில் தற்போது கடந்த மாத இறுதியில் இருந்து  நிலவி வரக்கூடிய உறைபனி பொழிவு காரணமாகவும், பகல் நேரங்களில் கொளுத்தும்  வெளியில் காரணமாகவும் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பசுமை குறைய  துவங்கியுள்ளது.

புற்கள், செடி கொடிகள், தாவரங்கள் பனி காரணமாகவும்,  வெயில் காரணமாகவும் காய துவங்கியுள்ளன. இதனால் வனத்தீ ஏற்படக்கூடிய அபாயம்  ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தீ ஏற்படாத வண்ணம் தீத்தடுப்பு கோடுகள்  அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தற்போது தெப்பகாடு சாலை, மசினகுடி  சாலை என சாலையோரங்களில் சுமார் 50 அடி அகலத்தில் புதர் செடிகளை வெட்டி  அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் பழங்குடியின மக்கள்  ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில்  வனப்பகுதியில் வனத்தீ பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வாகன  ஓட்டிகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வனப்பகுதியில் வீசக்கூடாது.  காட்டுத் தீ பரவாமல் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: