குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது வழக்கு

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று இரட்டிப்பு சம்பளம் வழங்காத மற்றும் விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை. மேலும், இரட்டிப்பு சம்பளமும் வழங்கப்படுவதில்லை. இதனால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்களில் ஈரோடு தொழிலாளர் துறை இணை ஆணையர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 28 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 14 கடைகளில் முரண்பாடுகள் இருந்துள்ளன. அதேபோல், 67 உணவு நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 35 நிறுவனங்களில் முரண்பாடுகள் இருந்துள்ளன. மேலும், 52 தோட்ட நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், 16 நிறுவனங்களில் முரண்பாடுகள் இருந்துள்ளன. இதனால், 16 கடைகள், 35 உணவகங்கள், 16 தோட்ட நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டள்ளது.

Related Stories: