கள்ளக்காதல் விவகாரத்தில் ஜிம் மேலாளரை கொல்ல முயன்ற 3 வாலிபர்கள் குண்டாசில் கைது

திருச்சி, ஜன. 28: திருச்சி பாலக்கரை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ் மகன் அருண்பாபு (36). இவர் கோட்டை ஸ்டேஷன் ரோடு பகுதியில் சலீம் என்பவருக்கு சொந்தமான ஜிம்மில் மேலாளராக பணியில் உள்ளார். இந்த ஜிம்மில் கோட்டை பெரியசெட்டித் தெருவை சேர்ந்த சரண்யா (36) என்பவர் உடற்பயிற்சிக்கு வந்து சென்றார். இதில் சரண்யாவிற்கும் அருண்பாபுவிற்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அருண்பாபு, சரண்யாவுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இவர்களின் கள்ளக்காதலுக்கு தந்தையும் பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலன் (எ) செவன்ஹில்ஸ் பாலன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 23ம்தேதி வழக்கம் போல் அருண்பாபு ஜிம்மிற்கு சென்றார். தொடர்ந்து காலை 11.30 மணியளவில் இவரது நண்பர் வருவதாக கூறியதால் ஜிம்மில் இருந்து இறங்கி பழைய கோட்டை ஸ்டேஷன் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அருண்பாபுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குபதிந்து பார்த்திபன், முகமதுஷபி, அரவிந்த்ராஜ் (எ) அரவிந்த் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாலன் தலைமறைவானார்.

இதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பார்த்திபன், முகமதுஷபி, அரவிந்தன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. மேலும், 3 பேரும் வெளியே வந்தால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடக்கோரி தில்லைநகர் இன்ஸ்பெக்டர் சிந்துநதி பரிந்துரைத்தார். இதனை ஏற்ற மாநகர கமிஷனர் கார்த்திகேயன், சிறையில் உள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதற்கான நகல்களை சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீசார் வழங்கினர். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலன் (எ) செவன்ஹில்ஸ் பாலனை கடந்த 25ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த தில்லைநகர் இன்ஸ்பெக்டர் சிந்துநதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாலனை சிறையில் அடைத்தார்.

Related Stories: