திருச்சியில் 3 மாதத்திற்கு முன் பெண்ணிடம் 15 பவுன் செயின் பறித்த 3 பேர் கைது

திருச்சி, ஜன. 28: திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலு. பைனான்சியர். இவரது மனைவி சந்திரா (57). தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கிலியாண்டபுரத்தில் வசிக்கும் தனது மகன் சபரியை கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி இரவு பார்த்து பேசிவிட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பி்ன்னால் பைக்கில் வந்த 2 பேர் சந்திரா கழுத்தில் இருந்த 15 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர்.

இதில் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையில் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் கைதான பாரதி (எ) கொழுப்பு பாரதி என்பவரிடம் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சந்திராவிடம் செயினை பறித்ததும் அவர் தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை பாலக்கரை போலீசாரிடம் கன்டோன்மென்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாரதியிடம் காந்திமார்க்கெட் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஹரிபிரசாத், விஜய் ஆகியோருடன் சேர்ந்து செயினை பறித்ததாக கூறினார். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் தங்கவேலு, விற்பனை செய்த 15 பவுன் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை நடத்திய போலீசாரை மாநகர கமிஷனர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார்.

Related Stories: