நாகை மாவட்டத்தில் 117 பதவிகளுக்கு இன்று வேட்பு மனுதாக்கல்

நாகை, ஜன.28: நாகை மாவட்டத்தில் 117 பதவிகளுக்கு இன்று (28ம் தேதி) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் இன்று (28ம் தேதி) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி மாதம் 4ம் தேதி இறுதி நாள். 5ம் தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. 7ம் தேதி வேட்பு மனு திரும்ப பெறப்படுகிறது. 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை 22ம் தேதி நடக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலானது கட்சி அடிப்படையில் நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகளுக்கும். திட்டச்சேரி, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, கீழ்வேளூர் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதில் நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டும், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டும் என மொத்தம் 57 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதேபோல திட்டச்சேரி, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, கீழ்வேளூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் தலா 15 வார்டு என மொத்தம் 60 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்க உள்ளன. ஆக மாவட்டத்தில் மொத்தம் 117 பதிவிகளுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

Related Stories: