நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளநிலையில், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை செங்கல்பட்டு கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 22ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுராந்தகம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதுராந்தகம் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்தல், குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்பட அடிப்படை வசதிகள் குறித்து செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மதுராந்தகம் நகராட்சி ஆணையர் ந.அருள், வாக்கு எண்ணும் மையத்தின் ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். பொறியாளர் கௌரி, பணி மேற்பார்வையாளர் அறிவழகன், நகரமைப்பு அலுவலர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோன்று, அச்சிறுப்பாக்கம், கருங்குழி பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அச்சிறுப்பாக்கம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. அந்த வாக்கு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன், அச்சிறுப்பாக்கம் செயல் அலுவலர் எழிலரசன் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர், செய்தியாளர்களிடம் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி, 6 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆங்காங்கே வாகன சோதனை மற்றும் பறக்கும்படை சோதனை நடக்கிறது. தற்போது, 20 பறக்கும்படை அமைத்து, தயார் நிலையில் உள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி ஆங்காங்கே வாகன சோதனை மற்றும் பறக்கும் படை சோதனை நடக்கிறது’ என்றார்.

Related Stories: