வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை ஊராட்சியில் சமுதாயக் கூடம் இல்லாததால் மக்கள் அவதி: தனியார் மண்டபத்தில் பணம் விரயமாகும் அவலம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் அய்யம்பேட்டை ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், நூலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஆனால், சமுதாய கூடம் இல்லை. ஊராட்சியை சுற்றியுள்ள முத்தியால்பேட்டை, படப்பம், ஏரிவாய், வள்ளுவபாக்கம் உள்பட பல கிராம மக்கள் இந்த அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் வந்து, பல்வேறு பணிகளுக்காக காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு உள்பட பல பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

சுற்றுவட்டார கிராம மக்கள், அய்யம்பேட்டை ஊராட்சியில்  நிச்சயதார்த்தம், பிறந்தநாள், காதணி விழா என சிறு சுப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமானால், தனியார் திருமண மண்டபங்களில் அதிக பணம் கொடுத்து விழாவை நடத்த வேண்டியுள்ளது. சிலர், போதுமான பண வசதி இல்லாததால், தங்களது வீட்டின் வெளியே பந்தல் அமைத்து, எளிய முறையில் விழாவை நடத்துகின்றனர். அய்யம்பேட்டை ஊராட்சியில், சமுதாய கூடம் கட்டினால், ஏழை மக்களும் பயனடைவார்கள். இதனால், ஊராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கும். இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் கேட்டபோது,  சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமுதாய கூடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் சமுதாய கூடம் கட்டப்படும் என்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அய்யம்பேட்டை ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, சமுதாயக் கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: